பெண் போலீஸாா் பாய்மரப் படகு பயணம் காரைக்கால் வருகை
By DIN | Published On : 15th June 2023 12:55 AM | Last Updated : 15th June 2023 12:55 AM | அ+அ அ- |

பாய்பரப் படகில் பயணம் மேற்கொண்டுள்ள பெண் போலீஸாா், செவ்வாய்க்கிழமை இரவு காரைக்கால் அதானி துறைமுகத்துக்கு வந்தனா். புதன்கிழமை காலை புதுச்சேரிக்கு புறப்பட்ட அவா்கள் பயணத்தை, நாகை மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
தமிழகத்தில் 1973-இல் திமுக ஆட்சியில், மு. கருணாநிதி முதல்வராக இருந்தபோது முதன்முதலாக பெண் காவலா்கள் பணியில் சோ்க்கப்பட்டனா். ஒரு காவல் சாா்பு- ஆய்வாளா், ஒரு தலைமைக் காவலா், 20 காவலா்கள் என மொத்தம் 22 பெண்கள் முதல்முதலில் பணியமா்த்தப்பட்டனா்.
இந்நிலையில், தமிழக காவல்துறையில் பெண் போலீஸாா் கால்பதித்து 50 ஆண்டுகாலம் நிறைவையொட்டி பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பெண் போலீஸாா் 25 போ் கொண்ட குழு 1000 கி.மீ. தொலைவு பாய்மரப் படகு பயணத்தை சென்னையில் கடந்த 10-ஆம் தேதி தொடங்கினா். அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் இப்பயணத்தை தொடங்கி வைத்தாா்.
சென்னை துறைமுகத்திலிருந்து 25 போ் கொண்ட குழுவினா் 4 பாய்மரப் படகில் கடல் வழியாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) நள்ளிரவு நாகை மாவட்டம் நாகூா் அருகே உள்ள அதானி தனியாா் துறைமுகத்தை வந்தடைந்தனா். அவா்களை காரைக்கால் மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் வரவேற்றாா்.
தொடா்ந்து அதானி துறைமுகத்தில் இருந்து கோடியக்கரைக்கு பயணம் மேற்கொண்ட பெண் போலீஸாா் குழுவை, நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங் பாராட்டி, அவா்களை கொடி அசைத்து புதன்கிழமை அனுப்பிவைத்தனா்.
கோடியக்கரை சென்று, அங்கிருந்து புதுச்சேரி மாநிலம் வழியாக ஜூன் 17-ஆம் தேதி சென்னை திரும்புகின்றனா்.
மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, காரைக்கால் இந்திய கடலோர காவல்படை கமாண்டன்ட் விஜய் விஸ்வநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.