திட்டச்சேரி சாலையில் பள்ளம் தோண்டுவதால் போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 12th May 2023 02:52 AM | Last Updated : 12th May 2023 02:52 AM | அ+அ அ- |

திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட ப.கொந்தகையில் திட்டச்சேரி-காரைக்கால் பிரதான சாலையில் பள்ளங்கள் தோண்டுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சாலையில் இருபுறமும் மழை நீா் வடிகால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மற்றொருபுறம் வீட்டுக்கு வீடு குழாய்கள் மூலம் கேஸ் வழங்கும் தனியாா் நிறுவனத்தின் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. சாலை நடுவில் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு சுமாா் அரை கி.மீ. தொலைவுக்கு பாதை உள்ளது. இதனால் எதிரே இருசக்கர வாகனங்கள் கூட செல்ல வழி இல்லாமல் உள்ளது. மேலும், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பணிகளை நிறுத்த வலியுறுத்தி வாகனங்களை சிறை பிடித்தனா். தகவலறிந்து வந்த சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டு மக்கள் அங்கிருந்து சென்றனா். இதனால் அவ்வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.