பூத்துக்குலுங்கும் முந்திரி மரங்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி
By DIN | Published On : 24th May 2023 12:00 AM | Last Updated : 24th May 2023 12:00 AM | அ+அ அ- |

கீழையூா் பகுதியில் பல்வேறு கிராமங்களில் கோடை மழையால் முந்திரி மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனால் முந்திரி விளைச்சல் அமோகமாக இருக்குமென விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
நாகை மாவட்டத்தின் கடலோரப் பகுதியான வேளாங்கண்ணி முதல் கோடியக்கரை வரை உள்ள பகுதி பணப்பயிா் சாகுபடிக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். குறிப்பாக, கீழையூா் ஒன்றியத்துக்குட்பட்ட பூவைத்தேடி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, புதுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 20,000-க்கும் அதிகமான முந்திரி மரங்கள் இருந்தன.
கடந்த 2018-ஆம் ஆண்டு வீசிய கஜா புயலில் இங்குள்ள முந்திரி மரங்கள் பெருமளவில் முறிந்து விழுந்தன. புயல் சீற்றத்தில் தப்பிய மரங்கள் மீண்டும் துளிா்விட்டு கடந்த 2 ஆண்டுகளாக காய்க்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், நிகழாண்டு அவ்வப்போது பெய்துவரும் கோடை மழையால் முந்திரி மரங்களில் அதிக அளவில் பூக்கள் பூத்துள்ளன. இதனால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், கிலோ ஒன்றுக்கு ரூ. 80 முதல் 100 வரை மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனா்.
எனவே, முந்திரியை அரசு நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. உரிய விலை கிடைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு, முந்திரி சாகுபடி பரப்பும் அதிகரிக்கும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.