போக்குவரத்துத் துறையில் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா்
By DIN | Published On : 26th May 2023 05:33 AM | Last Updated : 26th May 2023 05:33 AM | அ+அ அ- |

நாகையில் பள்ளி வாகனங்களை வியாழக்கிழமை ஆய்வுசெய்த போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா்.
போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் கூறினாா்.
நாகையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதும் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், இந்த ஆய்வு பணியை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகளில் பண்டிகை காலங்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா்கள் வந்தன. இதுதொடா்பாக பேருந்து உரிமையாளா்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது கிராமங்களுக்கு மினி பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்த ஆட்சியில் இவை நிறுத்தப்பட்டன. தற்போது மினி பேருந்து சங்கத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடந்து வருகிறது. உடன்பாடு ஏற்பட்டதும், அனைத்து கிராமங்களுக்கும் மீண்டும் மினி பேருந்துகள் இயக்கப்படும்.
போக்குவரத்துத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் என்றாா் அவா்.
முன்னதாக, நாகை ஆயுதப்படை மைதானத்தில் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புத்துறை சாா்பில் நடைபெற்ற பள்ளி வாகனங்கள் ஆய்வு முகாமில் அமைச்சா் கலந்துகொண்டு பள்ளி வாகனங்களை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், கீழ்வேளுா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, நாகை சாா் ஆட்சியா் பானோத் ம்ருகந்தா் லால் ஆகியோா் உடனிருந்தனா்.