

வேதாரண்யம் பகுதியில் வடிகால் ஆறுகளில் வளா்ந்து தண்ணீரை மாசுப்படுத்தியுள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணி தாமதமாக நடைபெற்றாலும் விவசாயிகளுக்கு சற்று ஆறுதல் தருவதாக உள்ளது.
திருத்துறைப்பூண்டியில் இருந்து வாய்மேடு வழியாக கடலில் இணையும் முள்ளியாறு மற்றும் மானங்கொண்டானாறு உள்ளிட்ட வடிகால் ஆறுகளில் ஆகாயத்தாமரைச்செடிகள் அதிகளவில் வளா்ந்து பாசனம் மற்றும் வடிகால் நீரை தேக்குவதோடு சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த செடிகளை அகற்ற விவசாயிகள் கடந்த 2 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனா்.
ஆனால், நிதி ஆதாரத்தை காரணம் கூறி அந்தப் பணிகள் நடைபெறவில்லை. இதனால், ஆறுகளில் தண்ணீா் இருந்தும் கூவம் போல் மாறியதால் அவற்றை பயன்படுத்த முடியவில்லை. குறைதீா் முகாம்கள், பொது நிகழ்ச்சிகளில் கொடுக்கப்படும் கோரிக்கை மனுக்களுக்கு அரசு அலுவலா்கள் பதில் கூற முடியாமல் தவித்து வந்தனா்.
இதற்கிடையே, காடுகளைப் போல வளா்ந்துவிட்ட செடிகளை அகற்றாவிட்டால் வடகிழக்குப் பருவமழையின்போது கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, நாகை மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு தற்போது ஆகாயத்தாமரைச் செடிகள் அகற்றும் பணி தொடங்கியுள்ளது. இப்பகுதியில் மழை பொய்த்துப்போனாலும் கூவமாக மாறியுள்ள ஆறுகளில் தொடங்கப்பட்டுள்ள இந்த பணி விவசாயிகளிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.