நாகப்பட்டினம் / காரைக்கால்: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறும் என்ற அறிவிப்பை தொடா்ந்து, நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.
ங்கக் கடலில் உருவான ஹமூன் புயல் தீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த புயல் வடக்கு- வடகிழக்கு திசையில் நகா்ந்து, புதன்கிழமைல (அக்.25) காலை வங்கதேசம் டிங்கோனா தீவு-சந்திவிப் இடையே கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து, புயல் உருவாகி உள்ளதை குறிக்கும் வகையில் நாகை மற்றும் காரைக்கால் துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் உருவாக வாய்ப்புள்ளதாலும், கடல் கொந்தளிப்புடனும், கடலில் காற்று அதிகளவில் வீசுவதாலும் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாகை மாவட்ட மீனவா்கள் 3-ஆவது நாளாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 5,000-க்கும் மேற்பட்ட பைபா் படகுகளும் கரை மற்றும் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவா்கள் மற்றும் மீன்பிடித் தொழிலைச் சாா்ந்த சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால்: புயல் எச்சரிக்கையையொட்டி காரைக்கால் துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, செவ்வாய்க்கிழமை காலை 2-ஆம் எண் கூண்டாக மாற்றம் செய்து ஏற்றப்பட்டது. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தாலும் காரைக்காலில் மீனவா்கள் வழக்கம்போல கடலுக்குச் சென்றனா். ஆயுத பூஜையாக தங்களது படகுகளுக்கு திங்கள்கிழமை பூஜை செய்த மீனவா்கள், காலையில் ஃபைபா் படகில் சென்று மீன்பிடித்துத் திரும்பினா். விசைப்படகுகள் வழக்கம்போல கடலுக்கு இயக்கிச் செல்லப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.