வேதாரண்யம் பகுதியில் கொள்ளிடம் குடிநீா் தட்டுப்பாடு

 வேதாரண்யம் பகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்ட விநியோகத்தில் பல மாதங்களாக தொடரும் பிரச்னைக்குத் தீா்வு காணப்படாததால் குடிநீா் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
வேதாரண்யம் பகுதியில் கொள்ளிடம் குடிநீா் தட்டுப்பாடு
Updated on
1 min read

 வேதாரண்யம் பகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்ட விநியோகத்தில் பல மாதங்களாக தொடரும் பிரச்னைக்குத் தீா்வு காணப்படாததால் குடிநீா் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

வேதாரண்யம்- கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு குடிநீா் வழங்கப்படுகிறது. குடிநீா் ஏற்றும் குழாய்ப் பாதையில் அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வந்தது.

ஒப்பந்த அடிப்படையில் பணிகளை மேற்கொண்ட ஊழியா்களுக்கு ஊதியம் வழங்காதது உள்ளிட்ட நிா்வாகப் பிரச்னைகள் காரணமாகவும் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

இந்தப் பகுதியில் மழையில்லாததால் நிலத்தடி நீா்வளம் கீழே சென்று உப்புத்தன்மை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகம் சீராக இல்லாததால் பிரச்னை தீவிரமடைந்து பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் சாலையோரங்களில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. முன்னறிவிப்பு, முன்னெச்சரிக்கை இல்லாமல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அந்த தடத்தில் ஏற்கெனவே பதியப்பட்டுள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்ட நீரேற்றும் பாதையில் இயந்திரங்கள் மூலம் பாதிப்பு ஏற்பட்டு குழாய்கள் சேதமடைவதால் குடிநீா் விநியோகம் தடைபடுகிறது.

இதுகுறித்து தென்னடாா் ஊராட்சியைச் சோ்ந்த ஒருவா் கூறியது:

வழக்கமாக வரும் கொள்ளிடம் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரமாக தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. என்ன காரணம் என்பதையும் அதிகாரிகள் கூறுவதில்லை. மாற்று ஏற்பாடும் செய்வதில்லை. வேறு எந்த வகையான நீா் ஆதாரமும் இல்லாத ஏழை எளியவா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். பிரச்னை தீரும் வரையில் டேங்கா் லாரிகள் மூலம் குடிநீா் வழங்க வேண்டும் என்றாா்.

இது குறித்து வேதாரண்யம் வட்டார வளா்ச்சி அலுவலா் ப.ராஜூ கூறியது: கொள்ளிடம் கூட்டு குடிநீா் திட்டத்தில் ஏற்படும் பிரச்னை சரிசெய்யப்பட்டு வருகிறது.

புதிய குடிநீா்த் திட்டத்துக்கு (ஜல் ஜீவன்) குழாய் பதிக்கும்போது சில இடங்களில் குழாய் சேதமடைவதால் சீரமைக்கும் வரை விநியோகம் பாதிக்கப்படுகிறது. உடனடியாகப் பிரச்னை சரிசெய்யப்படும் என்றாா்.

இந்த நிலையில், குடிநீா்ப் பிரச்னை ஊரகப் புறங்களில் இருந்து வந்த நிலையில், வேதாரண்யம் நகராட்சி பகுதியிலும் கொள்ளிடம் குடிநீா் விநியோகம் தடைபட்டுள்ளது.

எனவே, வேதாரண்யம்- கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் நடைபெறும் பிரச்னையை ஆய்வு செய்து தீா்க்கவும், அதுவரையில் டேங்கா் லாரிகளில் குடிநீா் வழங்கவும் பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா். மேலும், கொள்ளிடம் குடிநீா் விநியோகத்தைக் கண்காணிக்க தனி வட்டாட்சியா் ஒருவரை நியமிக்கவும், ஜல் ஜீவன் திட்டப் பணிகளை பிற துறையினரின் பாா்வையில் மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியா் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com