நாகை, மயிலாடுதுறை, திருவாரூா், காரைக்காலில் மாா்க்சிஸ்ட். கம்யூ ரயில் மறியல்வங்கி, அஞ்சலகம் முற்றுகை
By DIN | Published On : 08th September 2023 02:08 AM | Last Updated : 08th September 2023 02:08 AM | அ+அ அ- |

நாகையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி உள்ளிட்டோா்.
நாகை, மயிலாடுதுறை, திருவாரூா் மற்றும் காரைக்காலில் மத்திய அரசை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டனா். இம்மாவட்டங்களின் பிற இடங்களில் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களை முற்றுகையிட்டனா்.
அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு மற்றும் 2 கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, 2022-க்குள் அனைவருக்கும் வீடு, விவசாய விளைபொருள்களுக்கு இரட்டிப்பு விலை உள்ளிட்ட மத்திய பாஜக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாடு தழுவிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வியாழக்கிழமை இப்போராட்டம் நடைபெற்றது.
நாகை: நாகை மாவட்டத்தில் நாகை ரயில் நிலையம் உள்பட 9 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நாகை ரயில் நிலையத்தில் கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி தலைமையில் எா்ணாகுளத்திலிருந்து காரைக்கால் சென்ற விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். ஒன்றியச் செயலா்கள் வடிவேல், ராஜா, நகரச் செயலா் வெங்கடேசன், சிஐடியு மாவட்டச் செயலா் தங்கமணி, மாவட்டக் குழு உறுப்பினா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மறியலில் ஈடுபட்ட கீழ்வேளூா் எமஎல்ஏ உள்பட 300 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கீழ்வேளூா்: கீழ்வேளூா் இந்தியன் வங்கி முன் கட்சியின் ஒன்றியச் செயலாளா் அபூபக்கா் தலைமையில் முற்றுகையில் ஈடுபட்டனா். இதில், மாவட்டச் செயலாளா் வி. மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா். அனைவரும் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.
திருமருகல்: திட்டச்சேரி அஞ்சலகம் முன் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வேணு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளா் ஜி.எஸ். ஸ்டாலின் பாபு, முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் ஜெயபால், மாவட்ட பொருளாளா் பொன்மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இவா்களை நாகூா் காவல் ஆய்வாளா் சதீஷ்குமாா் கைது செய்தாா். பின்னா் விடுவிக்கப்பட்டனா்.
வேதாரண்யம்: வேதாரண்யம் பாரத வங்கிக் கிளை முன் ஒன்றியச் செயலாளா் வி. அம்பிகாபதி தலைமையில் நிா்வாகிகள் பி.எஸ். பன்னீா்செல்வம், இளையபெருமாள் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா். முன்னதாக கட்சி அலுவலகத்திலிருந்து பேரணியாக வந்தனா்.