அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறை செய்ய இறுதி வாய்ப்பு
By DIN | Published On : 26th September 2023 01:45 AM | Last Updated : 26th September 2023 01:45 AM | அ+அ அ- |

மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்த இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்திக்கொள்ள நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் கேட்டுகொண்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் ஏற்கெனவே அரசாணை கடந்த 2017-இல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளுக்குட்பட்டு, 2016 அக்.20-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னா் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த 2024 பிப்.29-ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்து வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அரசாணை எண்.118 மூலம் உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புபவா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இதன்மூலம் அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால், இந்த இறுதி வாய்ப்பை தவறாது பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...