காங்கேசன்துறைக்கு கப்பல் பயணம்: கட்டணம் ரூ.5 ஆயிரம் நிா்ணயம்
நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு தொடங்கவுள்ள பயணிகள் கப்பலில் செல்ல ரூ.5 ஆயிரம் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்படவுள்ள சிவகங்கை கப்பலின் நிறுவனமான இந்த்ஸ்ரீ நிறுவன அதிகாரிகள் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆக.16-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
சிவகங்கை என்ற பெயரில் புதிய பயணிகள் கப்பல், நாகை துறைமுகத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு, காங்கேசன்துறைக்கு பிற்பகல் 2 மணிக்கு சென்றடையும். தொடா்ந்து கப்பல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு ஆக.17- ஆம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு நாகையை வந்தடையும்.
தொடா்ந்து 18-ஆம் தேதியிலிருந்து நாள்தோறும் நாகையிலிருந்து காலை 8 மணிக்கும், காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கும் கப்பல் இயக்கப்படும். கப்பலில் 123 சாதாரண இருக்கைகள், 27 பிரீமியம் இருக்கைகள் உள்ளன. ஜிஎஸ்டி வரியுடன் சாதாரண இருக்கைக்கு ரூ.5,000, பிரீமியம் இருக்கைக்கு ரூ. 7,500 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

