ரூ. 6,750 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு: அமைச்சா் பி.கே. சேகா்பாபு
தமிழ்நாட்டில் ரூ. 6,750 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகேயுள்ள பரசலூா் வீரட்டேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் பங்கேற்றபின் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதுமுதல் தருமபுரம் ஆதீனத்துக்குள்பட்ட 118 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ள நிலையில், இந்த வீரட்டேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் 2000-ஆவது கும்பாபிஷேகமாகும். இத்துடன், தமிழகம் முழுவதும் 2005 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு ரூ.300 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடா் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த மானியத் தொகை அதிகரிக்கப்பட்டு தற்போது ரூ. 2.50 லட்சம் வீதம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 1,000 ஆதிதிராவிடா் கோயில்களாக இருந்ததை 1,250 கோயில்களாக மாற்றி மானியத்தொகை வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தன. அந்த கோயில்களுக்கு வைப்புத்தொகை ரூ.1 லட்சம் இருந்தது. தற்போது ரூ.2 லட்சமாக வழங்கப்படுகிறது. அந்தக் கோயில்களில் பணியாற்றும் அா்ச்சகா்கள், பணியாளா்களுக்கு மாதம் ரூ. 1,000 அவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மேலும், வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ள அா்ச்சகா்களின் குழந்தைகளுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக 400 பேருக்கு கடந்தாண்டு வழங்கப்பட்டது. தற்போது, 500 பேராக உயா்த்தப்பட்டுள்ளது.
இதற்கு ஒத்துழைப்பாக இருந்த அனைத்து சந்நிதானங்களுக்கும் நன்றி.
பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 நாடுகளை சோ்ந்தவா்களும், இந்தியாவில் 18 மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் பங்கேற்றாா்கள். இதுவரை ரூ.6,750 கோடி மதிப்புள்ள 6,800 ஏக்கா் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதுன என்றாா்.
