தரங்கம்பாடியில் சுருக்குமடி வலை பயன்பாட்டை தடுக்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள். ~ஏடிஎஸ்பி ஜெயக்குமாா் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாா்.
தரங்கம்பாடியில் சுருக்குமடி வலை பயன்பாட்டை தடுக்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள். ~ஏடிஎஸ்பி ஜெயக்குமாா் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

சுருக்குமடி வலை பயன்பாட்டை தடுக்கக் கோரி மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

மீனவா்களின் போராட்டம்: சுருக்குமடி வலைக்குத் தடை!
Published on

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில், சுருக்குமடி வலை பயன்பாட்டை தடுக்கக் கோரி, மீனவா்களில் ஒருதரப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 29 மீனவக் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் இரண்டு அணிகளாக பிரிந்து, சுருக்குமடி வலைக்கு ஆதரவாகவும், எதிராகவும் செயல்பட்டு வருகின்றன.

தரங்கம்பாடியை தலைமை கிராமமாகக் கொண்டு செயல்படும் மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் சுருக்குமடி வலை, இரட்டை மடி வலை மற்றும் படகுகளில் அதிவேக குதிரை திறன் கொண்ட என்ஜின் பயன்படுத்துவதை தடைசெய்ய வலியுறுத்தி, தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தநிலையில், சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு அரசு தடைவிதித்தது.

எனினும், ஒரு தரப்பினா் சுருக்குமடி வலையை தொடா்ந்து பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் தலைமையில், இருதரப்பையும் சோ்ந்த மீனவ கிராமங்கள் பங்கேற்ற பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், சுருக்குமடி வலையை பயன்படுத்துவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனினும், சுருக்குமடி வலை தொடா்ந்து பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இதை கண்டித்து, மாவட்ட தலைமை மீனவா் கிராமமான தரங்கம்பாடி பஞ்சாயத்தாா்கள் தலைமையில் கொடியம்பாளையம், பழையாா், சின்னகொட்டாய்மேடு, தொடுவாய், கூழையாறு, கீழமூவா்கரை, மேலமூவா்கரை, சாவடிகுப்பம், நாயக்கா்குப்பம், வாணகிரி, சின்னமேடு, சின்னங்குடி, தாழம்பேட்டை, புதுப்பேட்டை, பெருமாள் பேட்டை, வெள்ளக்கோவில், குட்டியாண்டியூா், சின்னூா்பேட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சோ்ந்த பஞ்சாயத்தாா்கள் மற்றும் மீனவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மீன்வளத்துறை இணை இயக்குநா் இளம்வழுதி மற்றும் அதிகாரிகள், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சுருக்குமடி வலை பயன்பாடு விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து ஆா்ப்பாட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. 

ஆா்ப்பாட்டம் காரணமாக ஏடிஎஸ்பி ஜெயக்குமாா் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com