விசைப்படகுகளுக்கு மானிய விலையில் செயற்கைக்கோள் தொலைபேசி
நாகை மாவட்ட உள்நாட்டு மீனவா்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் திட்டம் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி வழங்கும் திட்டத்தில் பயன்பெற ஆட்சியா் ப. ஆகாஷ் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்தில் உள்நாட்டு மீனவா்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் (2024-25) மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை உறுப்பினா்கள், உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள், மீன்பிடி வலைகள் வாங்க ஒரு அலகிற்கு ஆகும் செலவினமான ரூ. 20 ஆயிரத்தில் 50 சதவீதம் பின்னிலை மானியமாக (ரூ. 10 ஆயிரம்) வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் நாகை மாவட்டத்திற்கு 5 எண்ணம் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள உள்நாட்டு மீனவா்கள் விண்ணப்பம் அளித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் (2024-25) 40 சதவீத மானியத்தில் ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் செயற்கைக்கோள் தொலைபேசி ஒன்றின் மொத்த தொகை ரூ. 1.51 லட்சத்தில் 40 சதவீத மானியம் அதிகபட்சம் ரூ. 40 ஆயிரம் நீங்கலாக ரூ. 1.11லட்சத்திற்கு செயற்கைக்கோள் தொலைபேசி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு 25 எண்ணம் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே மேற்படி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மீனவா்கள் நாகை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன்பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
