நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற கடைப்பிடிக்க வேண்டிய உர மேலாண்மை
கீழ்வேளூா்: நேரடி நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற கடைப்பிடிக்க வேண்டிய உர மேலாண்மை குறித்து, கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கல்லூரியின் முதல்வா் ஜி. ரவி, உழவியல் துறை உதவி பேராசிரியா் அ. பாலசுப்ரமணியன், மண்ணியல் துறை இணை பேராசிரியா் அ. அனுராதா ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நேரடி நெல் விதைப்பில் உயா் விளைச்சல் பெற பெரும் சவாலாக இருப்பது உர மேலாண்மை. மட்கிய தொழு உரம், பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரம், அத்துடன் தேவையான அளவு ரசாயன உரங்களை சரியான காலத்தில் இடுவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.
அதன்படி, எங்கெல்லாம் மண் இறுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் ஏக்கருக்கு ஒரு டன் ஜிப்சம் மற்றும் 5 டன் மட்கிய தொழு எரு இட்டு கடைசி உழவு செய்ய வேண்டும். விதை கடினப்படுத்துதல் மிகவும் முக்கியமான பயிா் நோ்த்தியாகும். இதற்கு 100 கிலோ விதையை 100 லிட்டா் நீரில் ஒரு கிலோ மியூரேட் ஆஃப் பொட்டாஷ் கலந்த கரைசலில் 10 மணி நேரம் ஊற வைத்து பின்பு நீரை வடித்து நிழலில் காய வைத்து பயன்படுத்த வேண்டும்.
4 பாக்கெட் அசோஸ்பைரிலம் (800 கிராம் / ஏக்கா்) மற்றும் 4 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா( 800 கிராம் / ஏக்கா் ) அல்லது அசோபாஸ் (1,200 கிராம் /ஏக்கா்) ஆகியவற்றுடன் 10 கிலோ தொழு உரம் மற்றும் 10 கிலோ மண் கலந்து வயலில் முதல்மழை வந்தவுடன் தூவவும். காவிரி டெல்டா பகுதியில் மத்திய கால பயிருக்கு தேவையான பொதுவான உர அளவு 30: 10 :15 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள்.
ஓா் ஏக்கருக்கு யூரியா 56 கிலோ மற்றும் 25 கிலோ பொட்டாஷ் உரத்தை மூன்று பகுதிகளாக பிரித்து பயிா் முளைத்த 20 - 25, 40 - 45 மற்றும் 60 - 65 நாட்களில் மேலுரமாக நேரடி நெல் விதைப்பில் அளிக்க வேண்டும். 22 கிலோ டிஏபி யை ஒரே தடவையாக பயிா் முளைத்த 20 - 25 நாட்களில் இடவேண்டும்.
எங்கெல்லாம் துத்தநாகக் குறைபாடு காணப்படுகிறதோ அங்கு துத்தநாக சல்பேட் 10 கிலோவை மணலுடன் கலந்து தெளிக்க வேண்டும். இரும்புச்சத்து பற்றாக்குறை காணப்பட்டால் பெர்ரஸ் சல்பேட் ஏக்கருக்கு 20 கிலோவை மணலுடன் கலந்து தெளிக்க வேண்டும்.
இலை வழி உரமாக யூரியா ஒரு சதம், டிஏபி 2 சதம் மற்றும் பொட்டாஷ் ஒரு சதம் கரைசலை இருமுறையாக பூங்குருத்து உருவான தருணத்திலும் மற்றும் 10 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும். இதனால் நெல்மணிகள் நல்ல திரட்சியுடனும் அதிக எடையுடனும் இருக்கும் என தெரிவித்துள்ளனா்.
