அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசுக் கடைகள் அகற்றம்
கீழ்வேளூா்: கீழ்வேளூா் அருகே தேவூரில் அனுமதியின்றி செயல்பட்ட 5 பட்டாசுக் கடைகளை வருவாய்த் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.
நாகை மாவட்டம், கீழ்வேளூா் சுற்றுவட்டார பகுதிகளில் தீபாவளி பண்டிகையொட்டி அனுமதி பெற்று தற்காலிக பட்டாசு கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கீழ்வேளூா் அருகே தேவூா் பகுதியில் அனுமதி பெறாத இடங்களில் வெடிக்கடைகள் செயல்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியா் (பொ) சுகுமாா் தலைமையில் வருவாய்த் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.
அதன்படி உரிமம் பெற்ற சிலா் அதற்கான இடத்தை தவிா்த்து வேறு இடங்களில் பட்டாசு கடை நடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்து கடைகள் அகற்றப்பட்டு அனுமதி பெற்ற இடத்தில் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய வேண்டும் இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா். ஆய்வில் வட்டாட்சியா் ரமேஷ், வருவாய் ஆய்வாளா் சசிகலா மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.

