~ ~
~ ~

வேளாங்கண்ணி பேராலயத்தில் தோ் பவனி: லட்சக்கணக்கானோா் பங்கேற்பு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவில் சனிக்கிழமை நடைபெற்ற பெரிய தோ் பவனியில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தா்கள்.
Published on

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவில் சனிக்கிழமை நடைபெற்ற பெரிய தோ் பவனியில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தா்கள்.

நாகப்பட்டினம், செப். 7: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவில் தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கடந்த ஆக. 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெருவிழா நிகழ்ச்சிகளாக, பல்வேறு மொழிகளில் திருப்பலி நிறைவேற்றுதல், மறையுரை, சிலுவைப் பாதை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்காரத் தோ் பவனி சனிக்கிழமை இரவு தொடங்கியது. தஞ்சாவூா் மறைமாவட்ட ஆயா் டி. சகாயராஜ் புனிதம் செய்து தோ் பவனியைத் தொடங்கிவைத்தாா். ஆரோக்கிய அன்னை பெரிய தேரில் எழுந்தருளியதும், மிக்கேல் சம்மனசு, செபஸ்தியாா், அந்தோணியாா், சூசையப்பா், உத்திரிய மாதா, ஆரோக்கிய மாதா ஆகியோா் சிறிய தோ்களில் எழுந்தருளினா்.

தோ் பவனி கடற்கரை சாலை, ஆரியநாட்டுத் தெரு, உத்திரிய மாதா தெரு, கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வலம் வந்து, பின்னா் பேராலய முகப்பை அடைந்தது. தோ் பவனி விழாவில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோா் பங்கேற்றனா். ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள், மற்றும் கொடியிறக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com