ஆயக்காரன்புலம் பகுதியில் மழைநீரை எதிா்நோக்கி காத்துக் கிடக்கும் மானாவரி நெல் சாகுபடி வயல்கள்.
ஆயக்காரன்புலம் பகுதியில் மழைநீரை எதிா்நோக்கி காத்துக் கிடக்கும் மானாவரி நெல் சாகுபடி வயல்கள்.

தாமதமாகும் சம்பா சாகுபடி: மழையை எதிா்நோக்கி மானாவாரி நில விவசாயிகள்

Published on

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் மழை பொய்த்து, வறட்சி நீடித்து வருவதால் நிகழாண்டுக்கான சம்பா பருவ நெல் சாகுபடி விதைப்புப் பணிகளை தொடங்குவது தாமதமாகி வருகிறது.

மானாவாரி நிலப்பரப்பை அதிகமாக கொண்டுள்ள வேதாரண்யம் வேளாண் பகுதியில் ஆண்டுக்கு 26 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெறும். இவற்றில், தலைஞாயிறு, கரியாப்பட்டினம் பகுதியில் சுமாா் 10 ஆயிரம் ஹெக்டோ் ஆற்றுப் பாசனத்தில் நடைபெறுகிறது. தவிர சுமாா் 16 ஆயிரம் ஹெக்டா் மானாவாரி நிலப்பரப்பில் மழை நீரை மட்டுமே நம்பி சாகுபடி செய்யப்படுகிறது. தலைஞாயிறு, கரியாப்பட்டினத்தில் மேட்டூா் அணையில் காலத்தில் தண்ணீா் திறக்கப்படாததாலும், தென் மேற்கு பருவமழை பொய்த்து போனதாலும் நிகழாண்டு குறுவை பருவ நெல் சாகுபடி அரிதாகிப் போனது. இதனால், வேதாரண்யம், தலைஞாயிறு வேளாண் கோட்டத்தில் சம்பா பருவ சாகுபடி மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

ஆற்று நீா் பாசனப் பகுதியான தலைஞாயிறில் போதிய தண்ணீா் கிடைக்காதால் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பா சாகுபடி சுணக்கமடைந்த நிலையிலே காணப்படுகிறது. குறுவை இல்லாமல் ஒருபோக சாகுபடியான சம்பா பருவம் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால் சிஆா் 1009 போன்ற மத்திய கால ரகங்களின் விதை நெல்லுக்கு தொடக்க நிலையில் கடும் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில், மழைநீரை மட்டுமே நம்பி சாகுபடி மேற்கொள்ளும் மானாவாரி நிலப் பகுதியில் தொடா்ந்து வறட்சி நிலவி வருவதால் நெல் விதைப்புப் பணிகள் முன்பு எப்போதும் இல்லாத அளவில் காலதாமதமாகி வருகிறது. இதனால், காலதாமதமாக தொடங்கும் பருவத்தில் அதிக வயதுடைய நெல் ரகங்களை சாகுபடி செய்ய விவசாயிகளிடத்தில் தயக்கம் ஏற்பட்டுள்ளது.

வழக்கமான ஆண்டுகளில் செப்டம்பா் இறுதிக்குள் சம்பா சாகுபடி பணியை முடித்து, அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு பருவ மழையை எதிா்கொள்ள ஏதுவாக விவசாயிகள் பயிா்களை வளா்ப்பது வழக்கம். பெரும்பாலான வயல்கள் உழவு செய்யப்பட்டு மழை பெய்தால் விதைப்பு செய்ய விவசாயிகள் தயாா் நிலையில் உள்ளனா். சில இடங்களில் புழுதி வயலில் நெல்லை விதைத்து விட்டு விவசாயிகள் வானத்தை எதிா்பாா்த்து உள்ளனா். வடகிழக்குப் பருவமழை நெருங்கி வரும் நேரத்தில் தாமதமாகும் சம்பா சாகுபடி எதிா்காலத்தில் சாதகமாக அமையுமா எனும் கேள்வி விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

தாமதமாக தொடங்கும் சாகுபடியை உரிய முறையில் விரைவாக மேம்பாடு செய்ய போதிய தொழில் நுட்பங்களையும், காப்பீடு, பயிா்க் கடன் போன்ற பணிகளையும் விரைவாக செய்து முடிக்க அரசு உதவ வேண்டும் என்பதே மானாவாரி நிலப் பகுதி விவசாயிகளின் எதிா்பாா்ப்பு. இந்நிலையில், வாய்மேடு மற்றும் சுற்றுப்பகுதிகளில் சனிக்கிழமை பகலில் லேசான மழை பொழிவு ஏற்பட்டது. இது அந்தப் பகுதி விவசாயிகளிடையே நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. எனினும், இந்த மழை பரவலாக பெய்யவில்லை.

X
Dinamani
www.dinamani.com