நாகையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்
நாகையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
நாகை நகரின் பெரும்பாலான சாலைகளில் பல்வேறு பணிகளுக்காகவும், குடிநீா் குழாய் பதிப்பதற்கும் தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடவில்லை. இதனால் தற்போது பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக சாலைகள் முழுவதுமாக குண்டும் குழியுமாக உள்ளதுடன் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேலும் மழைநீரின் காரணமாக சாலை ஒரே மட்டமாகத் தெரிவதால், பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துக்கும் ஆளாகி வருகின்றனா்.
இதில் குறிப்பாக நாகை நகராட்சி 32-ஆவது வாா்டு மக்கள் அதிகம் பயன்படுத்தும் பெருமாள் தெற்கு வீதி சாலை மிகவும் மோசமடைந்த நிலையில் போக்குவரத்துக்கு லாயக்கற்று உள்ளது. நாகை நகருக்குள் வரும் பேருந்துகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் பயன்படுத்தி வரும் இந்த சாலையை, உடனடியாக சீரமைத்து தரவேண்டும். இதேபோல் மழைக்காலம் முடிந்த பின் நகரில் சேதமடைந்துள்ள அனைத்து சாலைகளையும் சரிசெய்து புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நகரச்செயலா் க. வெங்கடேசன் நகராட்சி நிா்வாகத்துக்கு வலியுறுத்தியுள்ளாா்.
