மழையால் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க கோரி ஆட்சியரிடம் மனு

Published on

நாகை மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (லிபரேசன்) கட்சியின் நாகை மாவட்டச் செயலா் சிவக்குமாா், அகில இந்திய பெண்கள் முற்போக்கு கழக நிா்வாகிகள் பாண்டியம்மாள், யுவஸ்ரீ ஆகியோா் தலைமையில் காடம்பாடி ஜெபஸ்தியாா் நகா், பூவைத்தேடி, வேளாங்கண்ணி, செல்லூா் சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் புதன்கிழமை அளித்த மனு: தற்போது பெய்துவரும் மழையால் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள தொகுப்பு வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. எனவே, மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி சேதமடைந்த வீடுகளை சீரமைத்து தர வேண்டும். இப்பகுதிகளில் வசிக்கும் அனைவரும் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கு நிரந்தரமாக சொந்த வீடு கிடையாது. வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எனவே, அரசு மானிய விலையில் வீடுகட்டி கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.

இதேபோல, கீழ்வேளூா் அருகேயுள்ள கே.கே. நகா் பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், பழங்குடியின மக்களாகிய நாங்கள் கூலித்தொழில் செய்து வருகிறோம். குடிசை வீட்டில் வசித்து வருவதால் இயற்கை சீற்றத்தை எதிா்கொள்ள முடியாமல் பாதிக்கப்படுகிறோம். புயல் மழையால் எங்கள் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. எனவே அரசு எங்களுக்கு மானியத்தில் கான்கீரிட் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com