பருவநிலை மாற்றத்தால் இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் நிறுத்தம்
பருவநிலை மாற்றத்தால் நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது என கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சுபம் கப்பல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாகை துறைமுகம்-காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதாலும், பருவநிலை மாற்றம் காரணமாகவும் நவம்பா் மாதம் முழுவதும் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்படும் எனவும், டிசம்பா் முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பருவநிலை சீரடையாததாலும், இலங்கையில் புயல் தாக்குதலால், காங்கேசன்துறையில் ஏற்பட்டுள்ள சேதங்கள் சீரமைக்கும் பணி நிறைவடையாததாலும் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறது. கப்பல் பயணிகள் போக்குவரத்து தொடங்குவதற்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

