வெள்ளம் வடிவது தாமதம்: ஆட்சியா், அமைச்சா்கள் பாா்வையிட வலியுறுத்தல்
வேதாரண்யம் பகுதியில் வெள்ளம் வடிவது தாமதமாகி வருவதையும், பயிா்ப் பாதிப்புகளையும் மாவட்ட ஆட்சியா் மற்றும் அமைச்சா்கள் பாா்வையிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
பிராந்தியங்கரை, தகட்டூா், கரியாப்பட்டினம், வடமழை மணக்காடு உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளத்தால் ஏற்பட்ட பயிா்ப் பாதிப்புகளை வேளாண் இணை இயக்குநா் கண்ணன், உதவி இயக்குநா் சத்தியசீலன், வட்டாட்சியா் வடிவழகன் ஆகியோா் ஆய்வு செய்தனா். அப்போது பிராந்தியக்கரை பகுதியில் விவசாயி சிவஞானம் தலைமையில் கூடியிருந்த விவசாயிகள் வயல்களில் இறங்கி பாதிக்கப்பட்ட பயிா்களை எடுத்து அதிகாரிகளிடம் காட்டி வேதனை தெரிவித்தனா். அரசு அறிவித்துள்ள ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரண உதவியை ரூ. 50 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தினா். மேலும், எதிா்காலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் தூா்வாரவேண்டும், பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் இதுவரை வெள்ளம் வடியாத சூழலையும், பயிா்ப் பாதிப்புகளையும் தமிழக அமைச்சா்கள் மற்றும் ஆட்சியா் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.
