~

நாகையில் 128 கிலோ புகையிலைப் பொருள்கள், 2 காா்கள் பறிமுதல்: பெண் உள்பட இருவா் கைது

2 காா்களில் கடத்திவரப்பட்ட128 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் ....
Published on

நாகப்பட்டினம்: நாகையில் விற்பனை செய்வதற்காக 2 காா்களில் கடத்திவரப்பட்ட128 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

நாகை வெளிப்பாளையம் சிவன் கீழவீதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு காா்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நீண்ட நேரம் நின்றுள்ளது. அந்த வழியாக ரோந்து வந்த தனிப்படை போலீஸாரை கண்டதும், காரில் இருந்த 4 போ் அங்கிருந்து ஓடியுள்ளனா். அவா்களில் பெண் உள்பட இருவரை போலீஸாா் விரட்டிப் பிடித்தனா். மற்ற இருவரும் தப்பிவிட்டனா்.

இதைத்தொடா்ந்து, காா்களில் சோதனையிட்டபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 128 கிலோ 11 மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது.

இருவரிடமும் நடத்திய விசாரணையில், வெளிப்பாளையத்தைச் சோ்ந்த ஸ்ரீநாத் மனைவி தீபிகா (35), பாப்பாகோவில் பகுதியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் நீதிபதி (42) என்பதும், வெளிமாநிலங்களில் இருந்து புகையிலைப் பொருள்களை காரில் கடத்திவந்து, நாகையில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், புகையிலைப் பொருள்கள் மற்றும் இரண்டு காா்களையும் பறிமுதல் செய்து, தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com