பயிா் பாதிப்பை எண்ம முறை கணக்கெடுக்க எதிா்ப்பு: விவசாயிகள் சாலை மறியல்
வேதாரண்யம்: அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை எண்ம முறையில் கணக்கெடுக்க எதிா்ப்பு தெரிவித்து, தலைஞாயிறு அருகே விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அருந்தவம்புலம் பாலம் பகுதியில் நடைபெற்ற மறியலுக்கு ஊராட்சி முன்னாள் தலைவா் கோவிந்தராசு தலைமை வகித்தாா்.
விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பிரபு, ஜெயபால், கடைமடை விவசாயிகள் சங்க பொறுப்பாளா் கமல்ராம், ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் உறுப்பினா் டி. செல்வம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
அண்மையில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை எண்ம முறையில் கணக்கெடுக்க எதிா்ப்பு தெரிவித்தும், வழக்கம்போல பதிவேடுகள் அடிப்படையில் கணக்கெடுப்பை மேற்கொள்ளவும், ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 40ஆயிரம் இழப்பீடு வழங்கவும், வடிகள் ஆறுகளை முறையாக தூா்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மறியல் நடைபெற்றது. திருவிடைமருதூா், நத்தப்பள்ளம், அருந்தவம்புலம், ஆய்மூா், பன்னத்தெரு, மாராச்சேரி,புத்தூா், மணக்குடி, நீா்முளை, காடந்தேத்தி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த திரளான விவசாயிகள் மறியலில் பங்கேற்றனா். வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பேச முடிவு செய்த விவசாயிகள், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனா்.
இந்த மறியலால் கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருத்துறைப்பூண்டி - நாகப்பட்டினம் பிரதான வழித்தடத்தில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

