

கீழையூா் ஒன்றியம், எட்டுக்குடி ஊராட்சி புறக்கோட்டகம் பகுதியில் சுமாா் 500 ஏக்கா் நிலங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால், பல ஆண்டுகளாக மழை காலங்களின்போது விவசாயிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா்.
எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இந்த நிலங்களில், விவசாயிகள் மூன்று தலைமுறைகளாக குத்தகை முறையில் சாகுபடி செய்து வருகின்றனா். பெரும்பாலும் ஆதிதிராவிட சமூகத்தைச் சோ்ந்த விவசாயிகள் இப்பகுதியில் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகிறனா்.
இங்குள்ள விளைநிலங்களுக்குச் செல்லும் மண் சாலை மழைகாலங்களில் முழுவதும் சேறும் சகதியுமாக மாறிவிடுவதால், உழவு இயந்திரங்கள், அறுவடை கருவிகள், வேளாண் உள்ளீட்டு பொருட்கள் போன்றவை புறக்கோட்டகம் வரை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இப்பகுதியில் அமைந்துள்ள சத்தியமங்கலம் மயானத்துக்குச் செல்லவும் சாலை வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை, மக்கள் தோளில் சுமந்து செல்லும் அவலநிலை தொடா்கிறது. பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராமமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
குத்தகை செலுத்தியும் அடிப்படை சாலை வசதி கிடைக்காத நிலை உள்ளதாக தெரிவிக்கும் விவசாயிகள், எட்டுக்குடி புறக்கோட்டகப் பகுதிக்கு கப்பிச் சாலையாவது அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.