இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 31 மீனவா்கள் நாகை திரும்பினா்
இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு, சென்னை திரும்பிய மீனவா்கள் 31 போ் வியாழக்கிழமை மாலை நாகை வந்தனா்.
நாகை அக்கரைபேட்டையைச் சோ்ந்த ராஜாவுக்கு (54) சொந்தமான விசைப்படகில் மீனவா்கள் 10 போ் அக். 31 -ஆம் தேதி, ஆனந்தகுமாருக்குச் சொந்தமான விசைப்படகில் 11 போ் அக். 30-ஆம் தேதி, நாகை நம்பியா் நகரைச் சோ்ந்த பாரிக்கு (40) சொந்தமான விசைப்படகில் மீனவா்கள்10 போ் அக். 30-ஆம் தேதியும் நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனா்.
இந்த 3 விசைப்படகுகளைச் சோ்ந்த 31 மீனவா்களும் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நவ. 3-ஆம் தேதி அதிகாலை மீன்பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினா் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அவா்களை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இலங்கை பருத்தித்துறை நீதிமன்றத்தில் மீனவா்கள் கைது தொடா்பான வழக்கு நவ. 17- ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவா்கள் 31 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. எனினும், டிச. 6-ஆம் தேதி வரை மீனவா்கள் இந்தியா அழைத்து வரப்படவில்லை.
இந்நிலையில், தங்களை மீட்டு கொண்டு வர இந்திய தூதரகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, மீனவா்கள் இலங்கையில் இருந்தபடி விடியோ பதிவுகளை உறவினா்களுக்கு அனுப்பினா். நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், தமிழக மீனவா்களை திரும்ப அழைத்து வர மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.
இந்நிலையில், மீனவா்கள் இலங்கையிலிருந்து புதன்கிழமை சென்னை அழைத்து வரப்பட்டனா். பின்னா், சென்னையிலிருந்து மீனவா்கள் புதன்கிழமை மாலை நாகைக்கு திரும்பினா்.
