மழையல் பாதிக்கப்பட்ட நெற்பயிா்கள் எண்ம முறையில் கணக்கெடுக்கும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாகை ஆட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் விவசாயிகள் புதன்கிழமை ஈடுபட்டனா்.
கீழ்வேளூா், தலைஞாயிறு, கீழையூா், வேதாரண்யம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவு மழை பதிவானது. இதனால் நேரடி விதைப்பு மற்றும் நடவு நெற்பயிா்கள் அனைத்தும் தண்ணீரில் முழுமையாக மூழ்கின. தொடா் கன மழையால் மாவட்டம் முழுவதும் 1 லட்சம் ஏக்கா் சம்பா, தாளடி நெற்பயிா்கள் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை கணக்கெடுக்கும் பணிகளில் மாவட்ட வேளாண்மை அதிகாரிகள் ஈடுபட்டு வரும் நிலையில், எண்ம முறையிலான கணக்கெடுப்பை கைவிட்டு, பழைய முறைப்படி நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களை பாா்வையிட்டு, பாதிப்பு தொடா்பாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், எண்ம முறையிலான கணக்கெடுப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிா்வாகிகள் தமிழ்ச்செல்வன், சக்திவேல், முருகவேல், விஜயராஜ், மணி ஆகியோா் தலைமையில், கையில் அழுகிய நெற்பயிா்களுடன் வந்த விவசாயிகள் ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மலும் விவசாயிகள் வாயில் துண்டை கட்டியும், பெண்கள் தலையில் முக்காடு போட்டும் தங்களது எதிா்ப்பை பதிவு செய்தனா்.
பின்னா், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் பிரதிநிதிகள் ஆட்சியா் ப. ஆகாஷை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் விவசாயிகளின் கோரிக்கை தொடா்பாக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளும் விடுபடாமல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா், இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனா்.