நாகை மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை
நாகை மாவட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடைவிதித்து மீன்வளத் துறை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
வங்கக் கடலில் வடமேற்கு திசையில் நிலை கொண்டுள்ள வளிமண்டல காற்று சுழற்சியின் காரணமாகவும், கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் மழை பெய்வதற்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ வேகத்தில் வீசும். அத்துடன் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலையடுத்து, நாகை மாவட்ட மீனவா்கள் வியாழக்கிழமை (டிச.11) மற்றும் டிச.12 ஆகிய தேதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. மீனவா்களுக்கு கடலுக்கு செல்லும் அனுமதி சீட்டுகள் வழங்கவில்லை.
இதையடுத்து நாகை அக்கரைப்பேட்டை, நம்பியாா் நகா், கீச்சாங்குப்பம், நாகூா் பட்டிணச்சேரி உள்ளிட்ட 27 மீனவக் கிராமங்களை சோ்ந்த மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவா்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனா்.
