

திருவாரூா் அருகே குளிக்கரை ரயில் பாதையில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதியாக ரத்து செய்யப்பட்ட காரைக்கால் - திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்சி கோட்டத்தில் காரைக்கால் - தஞ்சை ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சியிலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் திருச்சி - காரைக்கால் டெமு ரயில் (76820) மற்றும் காரைக்காலில் இருந்து பிற்பகல் 2.55 மணிக்கு புறப்படும் காரைக்கால் - திருச்சி டெமு ரயில் (76819), காரைக்காலில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் காரைக்கால் - தஞ்சை ரயில் (56817) ஆகியவை டிச. 14, 16, 18 ஆகிய தேதிகளில் காரைக்கால் - தஞ்சை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், டிச.14, 16, 18 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்பட்ட திருச்சி - காரைக்கால் டெமு ரயில் (76820) மற்றும் காரைக்காலில் இருந்து பிற்பகல் 2.55 மணிக்கு புறப்படும் காரைக்கால் - திருச்சி டெமு ரயில் (76819), காரைக்காலில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் காரைக்கால் - தஞ்சை ரயில் (56817) ஆகிய ரயில்கள் வழக்கம்போல் வழக்கமான நேரத்தில் இயங்கும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.