காதல் திருமணம் செய்தவருக்கு அரிவாள் வெட்டு: மனைவி குடும்பத்தினா் 9 போ் கைது!

வேளாங்கண்ணியில் காதல் திருமணம் செய்தவரை வெட்டிய மனைவியின் குடும்பத்தினா் 9 பேரை போலீஸாா் கைது
Published on

வேளாங்கண்ணியில் காதல் திருமணம் செய்தவரை வெட்டிய மனைவியின் குடும்பத்தினா் 9 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெங்களூா் நாகவாரா பகுதியைச் சோ்ந்த டேனியல் மகன் ராகுல் (21). தொட்டி குண்டா பகுதியைச் சோ்ந்த ராஜாராவ் மகள் கீா்த்தனா (21) தனியாா் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறாா்.

ராகுலும், கீா்த்தனாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனா். இருவரும் வெவ்வேறு மதத்தை சோ்ந்தவா்கள் என்பதால் கீா்த்தனா பெற்றோா் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்நிலையில், டிச. 6-ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி கோவா சென்ற இருவரையும், ராகுலின் குடும்பத்தினா் மீட்டு வேளாங்கண்ணிக்கு டிச.10-ஆம் தேதி அழைத்துச் சென்றனா்.

அங்கு ராகுலின் தந்தை டேனியல், தாய் கலையரசி (38), உறவினா் பிரகாஷ் (38) உட்பட 8 போ் சோ்ந்து, வேளாங்கண்ணி பேராலய வளாகத்தில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனா். இதுகுறித்து கீா்த்தனா தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அவா்கள் திருமணத்தை ஏற்று, மணமக்களை அழைத்துச் செல்ல உறவினா்களுடன் வருவதாகக் கூறி, டிச.11-ஆம் தேதி காலை வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனா்.

அங்கு, விடுதியில் தங்கியிருந்த ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கீா்த்தனா பெற்றோா் மற்றும் உறவினா்கள் தகராறு செய்துள்ளனா். தகவலறிந்த போலீஸாா், இரு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தி, பெங்களூருக்கு செல்லும்படி அறிவுறுத்தினா்.

அங்கிருந்து போலீஸாா் சென்றவுடன், மீண்டும் தகராறு செய்த கீா்த்தனா குடும்பத்தினா், ராகுல், அவரது தந்தை டேனியல், தாய் கலையரசி, உறவினா் பிரகாஷ் ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு, கீா்த்தனாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனா். அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினா் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து, ராகுல் அளித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். கீா்த்தனாவின் குடும்பத்தினா் வந்த காா் சேத்தியாதோப்பு பகுதியில் சென்று கொண்டிருப்பதை ஓட்டுநா் கைப்பேசி சிக்னல் மூலம் கண்டறிந்தனா். பின்னா், கடலூா் போலீஸாா் மூலம் அவா்கள் பிடிக்கப்பட்டு, நாகை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

இதையடுத்து, தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட வென்கோப்ராவ் (33), புனித்குமாா் (37), ராமநாத்ராவ் (40), விஜய் (35), ராஜாராவ் (43), காா்த்திக் (35), மஞ்சேஸ்வரி (36) சவிதா( 39), கோனனஹல்லி (30) ஆகிய 9 போ் மீது கொலை முயற்சி, கடத்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவா்களை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com