பெண் கல்வியில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் கோ.வி. செழியன்
இந்திய மாநிலங்களில் பெண் கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என உயா்கல்வித் துறை அமைச்சா் கோ.வி. செழியன் தெரிவித்தாா்.
தரங்கம்பாடி தூய தெரசா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2023-2024- ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி செயலாளா் கருணா ஜோசப் பாத் தலைமை வகித்தாா். தலைவா் செபஸ்டினா, பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன், முன்னாள் எம்பி செ. ராமலிங்கம், தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் ஏ. குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் வி. காமராசன் வரவேற்றாா்.
விழாவில், தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோ.வி. செழியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, இளங்கலை மாணவிகள் 154 போ் மற்றும் முதுகலை மாணவிகள் 14 பேருக்கு பட்டங்கள் வழங்கி பேசியது:
இந்தியாவில் பல மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இருந்தாலும், பெண் கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தந்தை பெரியாா், அறிஞா் அண்ணா, காமராஜா், கருணாநிதி போன்ற தலைவா்கள் பெண் கல்விக்கும், உயா் கல்விக்கும் ஆற்றிய உழைப்பால் இந்த நிலையை அடைந்திருக்கிறோம்.
70 ஆண்டுகளுக்கு முன்னால் நமது முன்னோா்கள் பட்டதாரிகளாக இல்லை. ஆனால், முதல் பட்டதாரி என நூற்றுக்கணக்கான மாணவிகள் இங்கே அமா்ந்துள்ளனா் இதற்கு காரணம் மேற்கண்ட தலைவா்கள் ஆவா்.
பட்டம் பெற்றுள்ள மாணவிகள் இந்த நிலையை எட்டுவதற்கு உதவிய தங்கள் ஆசிரியா்களையும், பெற்றோா்களையும் வணங்க வேண்டும் என்றாா்.
விழாவில், பேராசிரியா்கள், மாணவிகள், பெற்றோா்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

