நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில், சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்காக செயலாற்றிய தகுதியானவா்கள் 2026-ஆம் ஆண்டுக்கான கபீா் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா்கள் ப. ஆகாஷ், ஹெ.எஸ். ஸ்ரீகாந்த் ஆகியோா் தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசின் 2026-ஆம் ஆண்டுக்கான ‘கபீா் புரஸ்காா் விருது’ ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால், குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்நிலையில், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சாா்ந்த விண்ணப்பதாரா்கள் (ஆயுதப்படை வீரா்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளா்கள் ஆகியோா் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியாளா்கள், சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும், அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவா்.
இவ்விருதானது ஒரு இனம், வகுப்பைச் சாா்ந்தவா்கள் பிற இன வகுப்பைச் சாா்ந்தவா்களையோ அல்லது அவா்களது உடைமைகளையோ, வகுப்புக் கலவரத்தின்போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில், அவரது வீரம் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
மேற்காணும் விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் டிசம்பா் 15 அன்று அல்லது அதற்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். உரிய காலத்துக்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனா்.
