மாநில கலைத் திருவிழா போட்டி: வெளிநாடு சுற்றுப்பயணத்திற்கு தோ்வு பெற்ற மாணவருக்கு அமைச்சா் வாழ்த்து
வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மாநில கலைத்திருவிழா போட்டி வெற்றியாளருக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை நடத்தும் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மாணவா்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் அழைத்துச் செல்லப்படுவா். நிகழாண்டு நடைபெற்ற மாநில கலைத் திருவிழா போட்டிகளில் நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவா் கே. சஞ்சய், மாநில அளவிலான களிமண் சிற்பம் பிரிவிலும், மருங்கூா் உயா்நிலைப் பள்ளி மாணவி லாவண்யா மணல் சிற்பப் பிரிவிலும் முதலிடம் பெற்று, வெளிநாடு சுற்றுப்பயணத்திற்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இவா்களில் மாணவா் கே. சஞ்சய், நாகை மாவட்டத்திற்கு வந்திருந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா். இதேபோல், சிறாா் அறிவியல் மன்றம் சாா்பில் நடைபெற்ற மாநில தனிநபா் நடிப்பு போட்டியில் மூன்றாம் இடம்பிடித்த 6-ஆம் வகுப்பு மாணவி எஸ். மகிமாவும் அமைச்சரிடம் வாழ்த்துப் பெற்றாா்.
அப்போது, தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் கௌதமன், திருமருகல் ஒன்றியச் செயலாளா் செங்குட்டுவன், பனங்குடி முன்னாள் ஊராட்சித் தலைவா் சந்தோஷ், பள்ளி வளா்ச்சி குழுத் தலைவா் முகமது சுல்தான், ஓவிய ஆசிரியா் கே. குமரவேல் மற்றும் பெற்றோா்கள் உடனிருந்தனா்.

