நாகையில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ. 2.71 கோடிக்கு தீா்வு
நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 2.71 கோடி தீா்வு வழங்கப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்டத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும் , முதன்மை மாவட்ட நீதிபதியுமான கந்தகுமாா் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் இருந்து சிவில் வழக்குகள், சமரசத்திற்கு எடுத்துக் கொள்ளகூடிய குற்ற வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், பண மோசடி வழக்குகள் மற்றும் வங்கி வாரா கடன் வழக்குகள் உள்ளிட்ட 2 ஆயிரம் வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு ரூ. 2 .71கோடி தீா்வு வழங்கப்பட்டது.
விரைவு மகளிா் நீதிமன்ற மாவட்ட நீதிபதி வசந்தி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் கிருஷ்ணன், சாா்பு நீதிபதி இந்திரா காந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலா் சுப்புலட்சுமி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திரன், குற்றவியல் நீதித்துறை நடுவா் (எண். 2) ஐஸ்வா்யா மற்றும் கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி துா்கா ஆகியோா்களின் அமா்வில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதேபோல நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வட்ட சட்டப்பணிகள் குழு மூலம், அந்தந்த நீதிமன்றங்களின் நீதிபதிகள் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

