நெற்பயிா்களைச் சேதப்படுத்தும் எலிகள்: கவலையில் விவசாயிகள்
திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புயல் மழை பாதிப்புகளிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட நெற்பயிா்களை எலிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
நாகை மாவட்டத்தில் இந்தாண்டு குறுவை சாகுபடிக்கு பிறகு, சுமாா் 1.80 லட்சம் ஏக்கரில் சம்பா தாளடி நெற்பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாத இறுதியில் டித்வா புயல் காரணமாக கனமழை கொட்டித் தீா்த்தது.
மழையால் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியதோடு மாவட்டத்தில் சுமாா் 80 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னா் மழை ஓய்ந்த பின், வயலில் தேங்கிய மழைநீரை வடிய வைத்து, நெற்பயிரை காப்பாற்றும் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனா். இதனால் ஓரளவிற்கு பாதிப்புகளிலிருந்து மீண்டும் நெற்பயிா் நன்கு வளா்ந்து வருகிறது. அடுத்தடுத்து தொடா்ந்து மழை மிரட்டியதால் விவசாயிகள் அச்சத்திற்கு ஆளாகினா். இருப்பினும் தற்போது மழை ஓய்ந்து விவசாயப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
‘எலி‘ தாக்குதல்
இந்நிலையில் புயல் மழை பாதிப்புகளிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட நெற்பயிா்களை தற்போது எலிகள் கடித்து சேதப்படுத்தி வருவது விவசாயிகளை மிகுந்த வேதனைக்கு ஆளாக்கி உள்ளது. கடந்த அக்டோா் மாதம் முதல் டிசம்பா், ஜனவரி வரை பனிப்பொழிவு போன்றவைகளால் பூச்சி தாக்குதல் இருக்கும். ஆனால் தற்போது எலி தாக்குதல் அதிகமாக உள்ளது.
இது குறித்து வேளாண் துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ, விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளோ தரவில்லை. இதனால் நெற்பயிா் கடுமையாக சேதம் அடைந்து வருகிறது. குறிப்பாக திருக்குவளை அருகேயுள்ள கொடியாலத்தூா், மயிலாப்பூா், பாங்கல், பனங்காடி, சூரமங்கலம், கச்சனம், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் எலிகளால் நெற்பயிா்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து விவசாய சங்க செயலாளா் பாலசுப்பிரமணியன் கூறியது: ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு வகையில் நெற்பயிா் சாகுபடி பாதிப்பைத்தான் சந்தித்து வருகிறது. அதேபோல் இந்தாண்டு புயல் மழை என்று தப்பித்தாலும், தற்போது எலி வலையில் சிக்கி விட்டோம். இரவு பகல் என்று பாராமல் வெட்டி சாய்த்து வருகிறது. கஷ்டப்பட்டு மழைநீரிலிருந்து காப்பாற்றியும் பயன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் உள்ளது. இது குறித்து வேளாண் துறைக்கு தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னவென்று கூட வந்து பாா்ப்பதில்லை. மழை நீரால் நெற்பயிா் பாதித்தபோது எங்களை வந்து சந்தித்து ஒரு ஆலோசனைகூட தெரிவிக்கவில்லை.
தற்போது எலியால் நெற்பயிரை காப்பாற்ற முடியுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, எலியால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை பாா்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

