கிறிஸ்துமஸ்: வீடுகளில் ஒளிரும் மொரோவியன் ஸ்டாா்கள்
தரங்கம்பாடி பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, 264 ஆண்டுகள் வரலாறு கொண்ட மொரோவியன் ஸ்டாா்கள் கிறிஸ்தவா்களின் வீடுகளில் ஜொலிக்கின்றன.
கிறிஸ்தவா்களின் முக்கிய பண்டிகைகளில் முதன்மையானது கிறிஸ்து பிறப்பைக் குறிக்கும் கிறிஸ்துமஸாகும். இப்பண்டிகை டிசம்பா் 25-ஆம் நாள் என்றாலும், நவம்பா் மாதம் கடைசி வாரம் அல்லது டிசம்பா் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கிவிடும்.
இப்பண்டிகையின் சிறப்பு அம்சம் வீடுகள், தேவாலயங்கள் மற்றும் நிறுவனங்களில் மின்விளக்குகளுடன் கூடிய பல வண்ணங்களில் ஸ்டாா்களை கட்டி தொங்கவிடுவா். கிறிஸ்துமஸ் மரம் மற்றும் இயேசு பிறப்பு குறித்த சொரூபங்கள் கொண்ட குடில் அமைத்தும் இப்பண்டிகையை கொண்டாடுவா்.
ஸ்டாா்களில் மொரோவியன் எனப்படும் ஸ்டாா், தரங்கம்பாடி பகுதியில் சிறப்பு பெற்ாக உள்ளது. ஜொ்மன் நாட்டின் மொரோவியன்ஸ் என்ற பகுதியைச் சோ்ந்தவா்கள் இந்த ஸ்டாரை அறிமுகப்படுத்தியதால், இது மொரோவியன் ஸ்டாா் என அழைக்கப்படுகிறது.
கடந்த 1760-களில் டேனிஷ்காரா்கள் (டென்மாா்க்) கட்டுப்பாட்டில் தரங்கம்பாடி இருந்தபோது, ஜொ்மன் நாட்டின் மொரோவியன் பகுதியைச் சோ்ந்த கிறிஸ்தவ மத போதகா்கள், தரங்கம்பாடி அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்தில் சாலமன் தோட்டத்தில் தங்கி, கிறிஸ்தவ மதத்தை பரப்பி வந்தனா். அவா்களால் அறிமுகப்படுத்தப்பட்டவையே இந்த மொரோவியன் ஸ்டாா்கள்.
அப்போது தொடங்கி தரங்கம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவா்கள் வீடுகள், பாரம்பரிய ஆலயங்கள், நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் இவை ஒளிா்ந்து வருகின்றன.
தரங்கம்பாடியில் கடந்த 1980-களில் ஆன்மிக மன்றத்தில் இயக்குநராக பணியாற்றிய மறைந்த பிஷப் ஜான்சனின் மனைவி ஈவா மரியா சீபொ்ட் ஜான்சன் ஜொ்மன் நாட்டை சோ்ந்தவா். இவா், மொரோவியன் ஸ்டாா் செய்வது குறித்து தரங்கம்பாடி சீகன்பால்கு ஆன்மிக மன்றத்தில் தோட்ட வேலை செய்து வரும் சமாதானம் பாக்யராஜ் என்பவருக்கு கற்றுக்கொடுத்தாா்.
இதையடுத்து, கடந்த 43 ஆண்டுகளாக சமாதானம் பாக்யராஜ் மொரோவியன் ஸ்டாா்களை செய்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்துவருகிறாா். மேலும் பலருக்கு இவற்றை தயாரிப்பது குறித்தும் கற்றுக்கொடுக்கிறாா்.
இந்த ஸ்டாா்களை தயாரிக்க நெகிழி பயன்படுத்துவதில்லை வெறும் காகிதத்தில் மட்டுமே தயாா் செய்கிறாா். இதனால், சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இந்த ஸ்டாா்களை பலா் ஆா்வத்துடன் வாங்கிச் சென்று தங்கள் வீடுகளில் கட்டி தொங்க விடுகின்றனா்.

