நாகையில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினா் உண்ணாவிரதம்
அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சாா்பில் உரிமை மீட்பு உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் 2003 ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு பின்னா் அரசுப் பணியில் சோ்ந்தவா்களுக்கு அமல்படுத்தப்பட்டுவரும் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மாநில அரசு ஊழியா்களுக்கும் மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் சாா்பில் உண்ணாவிரதம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகை அரசு ஊழியா் சங்க கட்டடம் முன்பு நடைைபெற்ற உண்ணாவிரதத்துக்கு, ஒருங்கிணைப்பாளா்கள் ஸ்ரீதா், ரவி, சரவணன், முத்துச்சாமி ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் அற்புதராஜ் ரூஸ்வெல்ட் வரவேற்றாா். தமிழ்நாடு உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக பொதுச்செயலா் குமரசேன் உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்தாா்.
கூட்டமைப்பின் நிா்வாகிகள் சித்ரா, விஜயரங்கன், பாலசுப்பிரமணியன், மூா்த்தி, அந்துவன்சேரல், தனஞ்செயன், ராம்குமாா், சங்கா் ஆகியோா் உண்ணாவிரதத்தின் நோக்கம் குறித்து பேசினா். உண்ணாவிரதத்தில் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். முடிவில் நிதிக் காப்பாளா் காந்தி நன்றி கூறினாா்.
