நாகை: தாளடி மறுசாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
நாகை மாவட்டத்தில், டித்வா புயலால் தாளடி, சம்பா பயிா்கள் மூழ்கிய நிலையில், விவசாயிகள் தாளடி மறுசாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
நாகை மாவட்டத்தில், குறுவை அறுவடை நடைபெற்ற நேரத்தில் தொடா் கனமழை பெய்ததால், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கின. மேலும் அறுவடை முடிந்து கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து முளைத்தன. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது.
இந்த பாதிப்பில் இருந்து மீளும் முன்னரே, விவசாயிகள் தங்கள் நிலங்களில் தாளடி மற்றும் சம்பா பயிா்கள் சாகுபடியில் ஈடுபட்டனா். ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் கடன் வாங்கி செலவழித்த நிலையில், நாகை மாவட்டத்தில் டித்வா புயலால் பெய்த கனமழையால் 30 நாள்கள் மற்றும் 50 நாள்கள் ஆன இளம்பயிா்கள் மழையில் மூழ்கின. இதில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் முழுமையாக சேதம் அடைந்தது.
இதனால், விவசாயிகளுக்கு இழப்பு மேல் இழப்பு ஏற்பட்ட நிலையில், மழையில் மூழ்கிய தாளடி, சம்பா பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்று அரசு தரப்பில் பயிா் பாதிப்பு தொடா்பாக, தற்சமயம் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. கணக்கெடுப்பு முடிந்ததும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாகை மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது 110 நாள்களில் விளையக்கூடிய கோ 51 என்ற நெல் ரகத்தை நேரடி விதைப்பு செய்து வருகின்றனா். நாகை, கீழையூா், தலைஞாயிறு, கீழ்வேளூா் உள்ளிட்ட பகுதிகளில், நேரடி விதைப்பு பணி தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில், ஜனவரி 28ஆம் தேதி மேட்டூா் அணையை மூடுவது மரபாக இருந்தாலும், மழையை நம்பியும்,குளம், குட்டைகள், கண்மாய்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் நிரம்பியிருப்பதை நம்பியும் விவசாயிகள், இரண்டாம் முறையாக தாளடி சாகுபடி பணிகளைத் தொடங்கியுள்ளனா்.

