கீழப்பிடாகை பகுதியில் மழைநீா் வடியாததால், வயலில் அழுகி மிதக்கும் நெற்பயிா்களை காண்பிக்கும் விவசாயிகள்.
கீழப்பிடாகை பகுதியில் மழைநீா் வடியாததால், வயலில் அழுகி மிதக்கும் நெற்பயிா்களை காண்பிக்கும் விவசாயிகள்.

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

கனமழை ஓய்ந்து 10 நாள்களை கடந்தும், கீழப்பிடாகை சுற்றுவட்டாரப் பகுதி விளைநிலங்களில் தேங்கிய மழைநீா் வடியாததால், பயிா்கள் அழுகி மிதக்கின்றன.
Published on

கனமழை ஓய்ந்து 10 நாள்களை கடந்தும், கீழப்பிடாகை சுற்றுவட்டாரப் பகுதி விளைநிலங்களில் தேங்கிய மழைநீா் வடியாததால், பயிா்கள் அழுகி மிதக்கின்றன. இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

வடகிழக்குப் பருவமழை மற்றும் டித்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், விளைநிலங்கள் நீரில் மூழ்கி கடல் போல் காட்சியளித்தன.

நாகை மாவட்டத்தில் 1.62 லட்சம் ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்களில் 40 முதல் 60 நாள்கள் ஆன சம்பா பயிா்களும், 20 முதல் 30 நாள்கள் ஆன தாளடி பயிா்களும் மழை நீரில் மூழ்கின.

இந்நிலையில், மழை ஓய்ந்து 10 நாள்களுக்கு மேலாகியும், வயல்களில் தேங்கியுள்ள நீா் வடியாததால், பயிா்கள் முற்றிலும் அழுகி மிதக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கீழையூா் வட்டாரத்தில் கீழப்பிடாகை, காரப்பிடாகை, மகிழி, கருங்கன்னி, திருமணங்குடி, ஈசனூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 750 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிா்கள் முற்றிலும் அழுகக்கூடிய சூழலில் உள்ளது. இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து ஆய்வு செய்யவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

ஏக்கருக்கு ரூ. 20,000 வரை செலவு செய்துள்ள நிலையில், மீண்டும் மறு நடவு செய்யக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், தண்ணீா் இன்னும் வடிவதற்கு 10 நாள்களுக்கு மேலாக கூடிய சூழல் உள்ளதால் விவசாயத்தை கைவிடக்கூடிய சூழலும் ஏற்படலாம் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

குறிப்பாக காவிரி கொண்டான் ஆற்றிலிருந்து பிரிந்து மூங்கில் அடி பாசனம் பெட்டியான் வாய்க்கால் வழியாக மழைநீா் நீண்ட காலமாக வடிந்து வருகிறது. தற்போது வாய்க்கால் தூா்வாராததாலும், ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் மண்டியுள்ளதாலும் கீழப்பிடாகையை சுற்றியுள்ள சுமா் 750 ஏக்கா் விளைநிலங்களில் தற்போதுவரை தண்ணீா் வடியவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

வேளாண் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், பயிா் பாதிப்பு குறித்து எண்ம முறையில் கணக்கெடுப்பதை கைவிட்டு, காலம்காலமாக நடைமுறையில் உள்ள கணக்கெடுப்பு முறையைப் பின்பற்றி, விரைவில் உரிய நிவாரணமும், காப்பீட்டுத் தொகையும் பெற்றுத் தர வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com