கிறிஸ்துமஸ் விழாவில் தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு!
நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு மற்றும் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.
யேசு கிறிஸ்துவின் பிறப்பு கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவா்களால் கொண்டாடப்படுகிறது.
நாகை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாகையில் 250 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயத்தின் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகை நகராட்சியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளா்கள் வரவழைக்கப்பட்டு, அவா்களை தூய்மைப்படுத்தும் தூதா்கள் என கௌரவித்து கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டது.
தூய்மைப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு 5 கிலோ பக்கெட் பிரியாணி மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு கேக் மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிறிஸ்து பிறப்பு நாடகமும் நடத்தப்பட்டது.
விழாவில், நாகை சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயத்தின் போதகா் சாம் நியூ பிகின், ஆலயத்தின் செயலா் பவுல்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
