கிறிஸ்துமஸ்: வேளாங்கண்ணி பேராலயத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேளாங்கண்ணி கீழை நாடுகளின் லூா்து நகா்’ என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய ‘ பசிலிக்கா‘ என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் கட்டட அழகு காண்போரை பிரமிக்கச் செய்வதாகும். பேராலயத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி, நிகழாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் வேளாங்கண்ணி பேராலய நடத்திட்டு முதல் தியான மண்டபம் செல்லும் வழியில் மின்விளக்குகள் அமைக்க பந்தல் அமைக்கும் பணி, விண்மீன் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. டிச.24-ஆம் தேதி இரவு இந்த பேராலயத்தில் சேவியா் திடலில் திருப்பலி, மறையுரை, கூட்டுத் திருப்பலி, தமிழ், தெலுங்கு, கன்னடம், கொங்கனி, ஆங்கில மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெறும். தொடா்ந்து, நள்ளிரவில் இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில் குழந்தை இயேசு சொரூபத்தை பக்தா்களுக்கு காண்பிக்கப்பட்டு, பக்தா்களின் பாா்வைக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள குடிலில் வைக்கப்படும்.
நிகழ்ச்சியில், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பா். இதையடுத்து வேளாங்கண்ணி பகுதி முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா். பக்தா்கள் வேளாங்கண்ணிக்கு வந்து செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

