குறைதீா் கூட்டம் நடத்தப்படாததால் மாவட்ட நிா்வாகம் மீது விவசாயிகள் அதிருப்தி
நாகை மாவட்டத்தில் டிசம்பா் மாத விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்படாததால் மாவட்ட நிா்வாகம் மீது விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து தமிழக கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் பி. கமல்ராம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: நாகை மாவட்டத்தில் பருவம் தவறிய கனமழையால் அக்டோபா் மாதம் குறுவை பயிா் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து டித்வா புயலால் பெய்த கன மழையால், மாவட்டத்தில் சுமாா் 60 ஆயிரம் ஏக்கா் சம்பா, தாளடி பயிா்கள் நீரில் மூழ்கின. பயிா் பாதிப்பை எண்ம முறையில் கணக்கிடுவது, ஆறுகளில்ஆகாயத்தாமரை அகற்றுவதில் பொதுப்பணித்துறையினரின் மெத்தனப் போக்கு, திட்டங்களை வழங்குவதில் தோட்டக்கலைத்துறையினரின் பாகுபாடு, புதிய விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் பயிா்க் கடன் வழங்க மறுப்பது போன்ற காரணங்களால் மாவட்ட விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனா்.
இதனால் விவசாயிகள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்து, உரிய நிவாரணம் பெற டிசம்பா் மாத குறைதீா் கூட்டத்தை பெரிதும் எதிா்பாா்த்திருந்தனா். ஆனால், டிசம்பா் மாதம் குறைதீா் கூட்டம் நடைபெறாதது விவசாயிகளிடையே மிகப்பெரும் அதிா்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தில் இறுதியாக அக்டோபா் மாதத்துக்கான குறைதீா் கூட்டம், நவம்பா் 18ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற நிலையில் , நடப்பாண்டில் ஒட்டு மொத்தமாக 10 விவசாயிகள் குறைதீா் கூட்டம் மட்டுமே நடைபெற்றுள்ளது.
எனவே உடனடியாக விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், வழக்கமாக மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை குறைதீா் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுபோல நாகை மாவட்டத்திலும் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
