செயலியில் மட்டும் மாதாந்திர பயணச்சீட்டு: ரயில்வே நடைமுறையால் பயணிகள் கடும் அவதி!

யில்வேயின் புதிய நடைமுறையால் பயணிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
செயலியில் மட்டும் மாதாந்திர பயணச்சீட்டு: ரயில்வே நடைமுறையால் பயணிகள் கடும் அவதி!
Updated on
2 min read

பா.லெனின்

ரயில்களில் பயணம் செய்வதற்கான மாதாந்திர பயணச்சீட்டை யுடிஎஸ் செயலியில் மட்டும் பெற முடியும் என்ற ரயில்வேயின் புதிய நடைமுறையால் பயணிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எண்ம பரிவர்த்தனை என்பது நாட்டில் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. இருப்பினும், இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கு இது எளிதானதல்ல. அவர்களின் எண்ம பரிவர்த்தனை, இணையதளம் வாயிலான செயல்முறைகளுக்கு உதவி தேவைப்படுகிறது.

தமிழகத்தில் தினமும் பல ஆயிரக்கணக்கானவர்கள் ரயில்களில் மாதாந்திர பயணச் சீட்டுப் பெற்று வருகின்றனர். ரயில் நிலையங்களில் பணத்தைச் செலுத்தினால் எளிதில் பயண அட்டை பெற முடியும். ஆனால் இப்போது, தமிழ்நாட்டில் பல ரயில் நிலையங்களில் பயணிகள் பயணச்சீட்டு மற்றும் மாதாந்திர பயணச் சீட்டுகளைப் பெறுவதில் கடுமையான சிக்கல்களை சந்திக்கின்றனர். பல்வேறு ரயில் நிலையங்களில் செயலி மூலமாக மட்டும் பணம் பெற முடியும் என்று சொல்லி மாதாந்திர பயண அட்டை தர மறுக்கின்றனர்.

செயலி இருந்தால் மட்டுமே பயணச்சீட்டு: தஞ்சை தலைமை தபால் நிலைய கணக்காளர் ஜெ.சசிகுமார் திருவாரூரில் வசித்து வருகிறார். இவர், ரயிலில் மாதாந்திர பயணச் சீட்டுப் பெற்று கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து தஞ்சை சென்று வருகிறார்.

கடந்த மாதம், சசிகுமார் பணம் கொடுத்து மாதாந்திர பயணச்சீட்டுப் பெற முயற்சித்தபோது, ரயில்வே ஊழியர்கள் ஜிபே

(எடஹஹ்) மூலம் மட்டுமே பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

சசிகுமாரிடம் ஜிபே பரிவர்த்தனை இல்லாததால், அவர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளார். பின்னர் நண்பரின் உதவியுடன் பயணச்சீட்டை பெற்றுள்ளார்.

மே மாதத்தில் ஜிபே செயலியைப் பதிவிறக்கம் செய்து, மாதாந்திர பயணச்சீட்டை பெற முயற்சித்தார். ஆனால், ரயில்வேயின் யுடிஎஸ் செயலி மூலம் மட்டுமே மாதாந்திர பயணச்சீட்டு பெற முடியும் என ஊழியர்கள் கூறியதால், அவருக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. தஞ்சை ரயில் நிலையத்திலும் சசிகுமார் முயற்சித்தபோது, அங்கேயும் இதே பதில் தான் கிடைத்துள்ளது.

இதேபோன்று, விழுப்புரம், மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழகத்தின் பல ரயில் நிலையங்கள் மற்றும் புதுச்சேரியிலும் ரொக்கப் பணம் கொடுத்து பயணச்சீட்டு வாங்க முயற்சித்த பயணிகளை, செயலியில் எண்ம பரிவர்த்தனை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு ரயில்வே விளக்கம்: தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ரயில்வே துறை எண்ம பரிவர்த்தனையை ஊக்குவிக்கின்றது என்றாலும், அது கட்டாயப்படுத்தப்படவில்லை. ஒரு சில ரயில் நிலையங்களில் புகார்கள் எழுந்துள்ளன. அதனால், அனைத்து ரயில் நிலையங்களிலும் முன்பதிவு மற்றும் பயணச்சீட்டு மையங்களில் ரொக்க பரிவர்த்தனையை தவிர்க்க முடியாது என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர் ரயில் நிலையத்தின் விவகாரம் குறித்து துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து இதேபோன்ற புகார் கடந்த சில நாள்களுக்கு முன்பு எழுந்தது. அப்போது, மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் சுதா, ரயில்வே உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசிய பின்னர், அங்கு பிரச்னையில்லை.

செயலி மற்றும் எண்ம பரிவர்த்தனை: நாட்டில், தினசரி ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன. பல லட்சம் பயணிகள் மாதாந்திர பயணச் சீட்டுப் பெற்று பயணிக்கின்றனர். இவர்களில் பலர் நவீன கைப்பேசிகள் வைத்திருக்கவில்லை.

அவர்களுக்கு எண்ம பரிவர்த்தனைகள் மற்றும் செயலிகள் மூலம் பயணச்சீட்டு பெறுவது எளிதாக இருக்காது. எனவே, ரயில்வே துறையில், எண்ம, செயலி பரிவர்த்தனைகளை கட்டாயப்படுத்துவது சரியானதல்ல. ரொக்க பரிவர்த்தனையை தவிர்க்கக் கூடாது. அனைத்து ரயில் நிலையங்களுக்கும் இந்த அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com