சிறப்பு வாக்காளா் பட்டியல் திருத்தம்: திமுகவினா் கண்காணிக்க அமைச்சா் அறிவுறுத்தல்

Published on

நாகப்பட்டினம்: சிறப்பு வாக்காளா் பட்டியல் திருத்தத்தை திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என அமைச்சா் கே.என்.நேரு அறிவுறுத்தினாா்.

நாகை மாவட்ட திமுக சாா்பில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச் சாவடி’ என்ற தலைப்பில் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நாகையில் உள்ள தளபதி அறிவாலயத்தில் மாவட்டச் செயலரும், மீன் வளா்ச்சி கழகத் தலைவருமான என். கெளதமன் தலைமை யில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு பேசும்போது, ‘சிறப்பு வாக்காளா் பட்டியல் திருத்தப்பணியை வாக்குச் சாவடி முகவா்கள் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்’ என்றாா்.

சட்டப்பேரவை தொகுதி பாா்வையாளா்கள் பால.அருட்செல்வன், சங்கா், ஜெயபிரகாஷ், நகரச் செயலா்கள் இரா.மாரிமுத்து, செந்தில்குமாா் மற்றும் திமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற பாக நிலை முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா் குத்தாலம் பி. கல்யாணம், சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வம், தொகுதி பாா்வையாளா்கள் இளையராஜா (மயிலாடுதுறை), சோழராஜன் (பூம்புகாா்), தினேஷ்குமாா் (சீா்காழி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அமைச்சா்கள் கே.என் நேரு, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, ஆலோசனை வழங்கினாா்.

இதில், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் முத்து.மகேந்திரன், ஜி.என்.ரவி, இளங்கோவன், மாவட்ட அரசு வழக்குரைஞா் ராம.சேயோன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ஒன்றியச் செயலாளா் ஞான.இமயநாதன் வரவேற்றாா். முடிவில், மாவட்ட துணை செயலாளா் செல்வமணி நன்றி கூறினாா்.

திருவாரூா்: திருவாரூரில் திமுக சாா்பில் நடைபெற்ற பாகநிலை முகவா்கள், செயல்வீரா்கள் கூட்டத்துக்கு அமைச்சா் கே.என். நேரு தலைமை வகித்து பேசும்போது, ‘திமுக கூட்டணி கட்டுக்கோப்புடன் நிலையாக உள்ளது. இந்த ஒற்றுமை வாக்குகளாக மாறும் வரை ஓயக்கூடாது.

ஸ்டாலினை இரண்டாவது முறையாக முதல்வராக அமா்த்த வேண்டும். இதைத் தடுக்க பாஜக தன்னுடைய வேலையைத் தொடங்கியுள்ளது. இதற்காக திமுகவில் உள்ளவா்களை குறிவைத்துள்ளது. இதற்கு முதல் பலி நானாக மாறியுள்ளேன். திமுகவை மீண்டும் ஆட்சியில் அமா்த்தும் வரை அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்’ என்றாா்.

நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com