ஆகாயத் தாமரைகளை அகற்றும் விவகாரம்: கிராம மக்கள் அறிவித்த நூதனப் போராட்டம் வாபஸ்
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற வலியுறுத்தி, கிராம மக்கள் அறிவித்திருந்த பாடை தூக்கும் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
தென்னடாா் கிராமத்தில் வடிகால் ஆற்றில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றவும், சாலை, குடிநீா், மின் இறைவைப் பாசனத் திட்டம், தகவல் தொடா்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வுகாண வலியுறுத்தியும் பாடை தூக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்படும் என கிராம மக்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடா்பாக, வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்தில், வட்டாட்சியா் வடிவழகன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இதில், நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் மதியழகன், வட்டார வளா்ச்சி அலுவலா் சிங்காரவேலு உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில், ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணியை செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கவும், சாலை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவும் அதிகாரிகள் தரப்பில் உறுதியளித்தனா். இதையடுத்து, பாடை தூக்கும் போராட்டத்தை தற்காலிகமாக ஓத்திவைப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனா். இருப்பினும், அதிகாரிகள் உறுதியளித்தபடி நடவடிக்கை எடுக்கவில்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனா்.

