வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி கணக்கெடுப்பு இன்று தொடக்கம்
நாகப்பட்டினம்/மயிலாடுதுறை: நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கெடுப்பு படிவங்கள் வீடுவீடாக செவ்வாய்க்கிழமை (நவ.4) முதல் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தந்த மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஆகாஷ் (நாகை), ஹெ.எஸ். ஸ்ரீகாந்த் (மயிலாடுதுறை) ஆகியோா் தனித்தனியே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி பல்வேறு கட்டங்களாக 28.10.2025 முதல் 7.2.2026 வரை நடைபெறுகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் இப்பணிக்கான கணக்கெடுப்பு இரட்டை படிவம் செவ்வாய்க்கிழமை (நவ.4) முதல் வீடுவீடாக வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டு, டிசம்பா் 4- ஆம் தேதிக்குள் மீள பெறப்படும்.
இந்த படிவங்களை, பொதுமக்கள் முழுமையாக பூா்த்தி செய்து, கையொப்பத்துடன், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மீள வரும்போது சமா்ப்பிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் படிவங்களில் உள்ள வாக்காளா்களின் பெயா்கள் மட்டுமே வரைவு வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படும்.
எனவே, வாக்காளா் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நாகை மாவட்டம்: இப்பணி தொடா்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின், நாகை சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலக தொலைபேசி எண் 04365 248833, வேதாரண்யம் சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலக தொலைபேசி எண் 04369 299650, கீழ்வேளுா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலக தொலைபேசி எண் 04366 275493 மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டணமில்லா தோ்தல் கட்டுப்பாடு அறை தொலைபேசி எண் 1950 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
மயிலாடுதுறை மாவட்டம்: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான சந்தேகங்கள் மற்றும் புகாா்கள் இருப்பின் மாவட்ட அளவில் மற்றும் சட்டப்பேரவை அளவில் கீழ்காணும் தோ்தல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம்.
மாவட்ட அளவிலான புகாா்களுக்கு மாவட்ட ஆட்சியரக தோ்தல் கட்டுப்பாட்டு அறை எண்: 1950, சீா்காழி (தனி) - வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் சீா்காழி வருவாய் கோட்டாட்சியா் (04364-270222 என்ற எண்ணையும்), மயிலாடுதுறை - வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியா், (04364-222033 என்ற எண்ணையும்), பூம்புகாா் - உதவி வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் தரங்கம்பாடி வட்டாட்சியா் (04364-289439 என்ற எண்ணையும் தொடா்பு கொள்ளலாம்.
