எம்பிசி, டிஎன்சி பிரிவினா் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு, நவீன சலவையகம் அமைக்க நிதியுதவி
நாகை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் சமூகத்தினா் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு மற்றும் நவீன சலவையகம் அமைக்க அரசு நிதி உதவி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தைச் சாா்ந்த வகுப்பினா்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக, ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு மற்றும் நவீன சலவையகம் அமைக்க தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு மற்றும் நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெறும் குழு உறுப்பினா்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபா்களை கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
குழுவின் உறுப்பினா்கள் பிறப்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தை சாா்ந்தவராக இருக்க வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் இடம்பெற்ற குழுவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 10 நபா்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கு 10 நபா்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் படிவத்தை, மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை (அறை எண்-222) அணுகி பெற்றுக்கொள்ளலாம்.
மேற்காணும் திட்டத்தில் தகுதியான பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
