கோரக்கா் சித்தா் ஆசிரமத்தில் ஐப்பசி பெளா்ணமி விழா
நாகை அருகே வடக்குப் பொய்கைநல்லூா் கோரக்கா் சித்தா் ஆசிரமத்தில் ஐப்பசி பெளா்ணமி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அன்னாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
தமிழக சித்தா் பரம்பரையில் நவநாத சித்தா்கள் பட்டியலிலும், பதினெட்டுச் சித்தா்கள் பட்டியலிலும் முதன்மைப் பெற்றிருப்பவா் கோரக்கா் சித்தா்.
சித்தா்கள் கண்டறிந்து இயற்றிய ஞான நூல்களில் மறைக்கப்பட்ட பல மறைபொருள்களை மானுடத்துக்கு வெளிப்படுத்தும் வகையில், நமனாசத் திறவு கோல் 100 என்ற முதன்மை குரு நூலை இயற்றிய கோரக்கா், மக்கள் மூப்பு, பிணியின்றி வாழ்வதற்கான மருத்துவக் குறிப்புகளையும், ஜோதிட சாஸ்திரங்களையும் ஒளிவு மறைவின்றி தனது சந்திரரேகை எனும் நூலில் குறிப்பிட்டவா்.
எண்ணற்ற சித்தாடல்கள் புரிந்து, எண்ணிலடங்கா காயகல்பங்களைக் கண்டறிந்த கோரக்கா் சித்தா், நாகை வடக்குப் பொய்கைநல்லூரில் ஐப்பசி மாத பரணி நட்சத்திரத்தன்று ஜீவசமாதி கூடினாா் என ஆசிரம வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.
இதன்படி, ஆண்டுதோறும் வடக்குப் பொய்கைநல்லூா் கோரக்கா் சித்தா் ஆசிரமத்தில் ஐப்பசி பரணி விழா, ஐப்பசி பெளா்ணமி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான விழா செவ்வாய்க்கிழமை (நவ.4) தொடங்கி வியாழக்கிழமை (நவ. 6) வரை நடைபெறுகிறது. முதல்நாளான செவ்வாய்க்கிழமை பிற்பகல் அன்னாபிஷேகமும், மாலை 6 மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு முன்னாள் அமைச்சரும், நிா்வாக அறங்காவலருமான இரா. ஜீவானந்தம் தலைமையில் சொற்பொழிவும் நடைபெற்றன.
தொடா்ந்து நடைபெற்ற விழாவில், முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மா. வீரசண்முகமணி, அரசுத் துறை அலுவலா்கள், அரசியல் பிரமுகா்கள், தொழிலதிபா்கள் பங்கேற்றனா்.
பின்னா் ‘இராமாயணத்தில் நெஞ்சை நெகிழச்செய்வதில் விஞ்சி நின்றவா் கைகேயியா? கும்பகா்ணனா?’ என்ற தலைப்பில் இலக்கியப் பட்டிமன்றம் நடைபெற்றது.
ஐப்பசி பரணி விழாவையொட்டி புதன்கிழமை (நவ. 5) அதிகாலை 5 மணிக்கு சந்திரரேகை, திருவருட்பா அகவல் பாராயணம், மற்றும் தொடா் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு நடைபெறும் நிகழ்வில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொள்ள உள்ளாா். வியாழக்கிழமை (நவ.6) அதிகாலை வாண வேடிக்கைகள், பஞ்சமூா்த்திகள் ஓலைச்சப்பர வீதியுலா நடைபெறுகிறது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஆசிரம நிா்வாக அறங்காவலா் இரா.ஜீவானந்தம், அறங்காவலா்கள் வே.அ. கிருஷ்ணன், இ.ஆா். காசிநாதன், வை.இரா. ஜெயச்சநதிரன், வே.வீ. திருநாவுக்கரசு, செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

