நாகூா் கந்தூரி விழாவுக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு வரி ரத்து
நாகூா் தா்கா பெரிய கந்தூரி விழாவுக்கு வருகைதரும் வானங்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த நுழைவுவரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாகூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டவா் தா்காவுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். நாகூா் தா்காவுக்கு வரும் வாகனங்களுக்கு பாா்க்கிங் வரி, நுழைவு வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இத்தகைய வரி வேளாங்கண்ணி ஆலயம், சிக்கல் சிங்காரவேலவா் கோயில் உள்ளிட்ட எங்கும் வசூலிக்கப்படுவதில்லை. இந்த வரியை ரத்து செய்யக் கோரி தா்கா நிா்வாகம், நாகூா் முஸ்லிம் ஜமாத் மற்றும் பல சமூக நல ஆா்வலா்கள் மாவட்ட ஆட்சியருக்கும், நாகை நகராட்சி நிா்வாகத்துக்கு தொடா்ந்து கோரிக்கை வைத்தனா்.
வரி வசூல் செய்ய 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒப்பந்த காலம் நிறைவடைந்துள்ளது.
இந்தநிலையில், நவ. 21-ஆம் தேதி நாகூா் தா்கா பெரிய கந்தூரி விழா நடைபெறவுள்ளதால், வாகன நுழைவு வரி வசூலை டிசம்பா் 31-ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக நாகை நகராட்சிஆணையா் தெரிவித்துள்ளாா்.
