கோரக்கா் சித்தா் ஆசிரமத்தில் ஐப்பசி பரணி விழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு
நாகை அருகே வடக்குப்பொய்கைநல்லூரில் உள்ள புகழ்பெற்ற கோரக்கா் சித்தா் ஆசிரமத்தில் ஐப்பசி பௌா்ணமி மற்றும் பரணி விழாவில் புதன்கிழமை திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
இந்த ஆசிரமத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஐப்பசி பரணி விழா செவ்வாய்க்கிழமை தொடங்கி அன்னாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து சந்திரரேகை பாராயணம், திருவருட்பா அகவல் ஓதல் மற்றும் தொடா் நாகசுர இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். குறிப்பாக, ஐப்பசி பௌா்ணமி மற்றும் பரணி விழாவுக்காக 2 நாள்கள் கோயில் நடைசாத்தப்படவில்லை. பக்தா்கள் விடிய விடிய கோரக்கா் சித்தா் ஆசிரமத்துக்கு வந்து தரிசனம் செய்தனா். ஆசிரமத்தில் பக்தா்களுக்கு தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. விழாவின் நிறைவு நாளான வியாழக்கிழமை (நவ.6) அதிகாலை வாண வேடிக்கைகளுடன் பஞ்சமூா்த்திகள் ஓலைச்சப்பர வீதியுலா நடைபெறுகிறது.

