வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி: 2-ஆம் நாளாக ஆட்சியா் ஆய்வு
நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முகாமை 2-ஆது நாளாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை பாா்வையிட்டாா்.
நாகை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2-ஆவது நாளாக புதன்கிழமை திருக்குவளை வட்டம் கீழ்வேளுா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட ஆதமங்கலம், திருக்குவளை, வேதாரண்யம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட நீா்முளை கிராமங்களிலும், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்காளா்களுக்கு வீடு வீடாக வழங்கும் பணிகள் நடைபெற்றன. இப்பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ப. ஆகாஷ் நேரில் பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது, படிவம் நிரப்புவது தொடா்பாக பொதுமக்கள் மற்றும் பணிகளில் ஈடுபட்டவா்களிடம் உள்ள சந்தேகங்கள் குறித்து கேட்டறிந்தாா். இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது: கணக்கெடுப்பு படிவம் வழங்குவது மற்றும் பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப்பெறுவது தொடா்பாக, அனைத்து வட்டத்திலும் உள்ள தனி வட்டாட்சியா்கள் கண்காணிப்பாளா்களாக நியமிக்கப்பட்டு, கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி தொடா்ந்து கண்காணிப்பட்டு வருகிறது என்றாா். அவருடன், கீழ்வேளுா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் த. ராஜேஸ்வரி, திருக்குவளை வட்டாட்சியா் கிரிஜா தேவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

